ban ki moonஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரான பான் கீ முன், பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அலைபேசியில் தொடர்புகொண்டுள்ளதுடன், இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை, சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய அவர், நல்லிணக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில், இலங்கையைப் புதிய பாதையில் பயணிக்கச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை, எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெறும் எனவும் குறிப்பிட்டார்.

பதவியிலிருந்து விலகிச் சென்றாலும் இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பான் கீ மூன் இதன்போது உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக பான் கீ மூன், தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.