கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்கும் தீர்மானம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
இக் கூட்டம் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது இதன்போது கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது. இதனை தொடர்ந்து இணைத் தலைவர்களும் அங்கீகரிக்க கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏகமனதாக எடுத்துள்ளது. இருப்பினும் கடந்த கால ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அது அடுத்து வரும் நாட்களில் அவை அவ்வாறே கைவிடப்பட்ட நிலைமைகளே அதிகம் எனவும் ஆனால் இந்த தீர்மானத்திற்கும் அந்த நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் கலந்துகொண்ட பொது அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.
அத்தோடு மாவீரர் துயிலுமில்லங்கள் யாரால் புனித பிரதேசங்களாக அறிவிக்கப்பட வேண்டும் அதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் நடவடிக்கைகள் என்ன? எப்படி யாரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பில் எந்தக் கருத்து பரிமாற்றங்களும் இடம்பெறவில்லை என்று குறிப்பிடத்தக்கது.