reginold cooray“ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்” மக்கள் குறைகேள் அலுவலகத்தினை எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி ஜனாதிபதி யாழில் திறந்து வைக்கவுள்ளார். முதன்முதலாக வட மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஜனாதிபதி நேரடியாக மக்களுக்கு தீர்வுகளை வழங்கவுள்ளார்.கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் குறைகேள் அலுவலகம் ஜனாதிபதி செயலகத்தில் இதுவரை செயற்பட்டு வந்தது. எனினும் வடபகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமலும், தீர்வுகள் கிடைக்காமலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் மகஜர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பொது மக்கள் மத்தியில் நிலவி வந்தது.

அந்தவகையில், ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் எனும் தொனிப்பொருளில், வடமாகாணத்தில் இந்த அலுவலகத்தினை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில், வட மாகாணத்திற்காக புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள இந்த அலுவலகத்தில் நியமிக்கவுள்ள அதிகாரிகளிடம் மக்கள் தமது பிரச்சினைகளை மகஜர் மூலமாகவோ, நேரடியாகவோ தெரிவிக்க முடியும்.

அதேநேரம், கிழமையில் ஒருநாள் ஜனாதிபதி செயலாளருடன் ஒன்லைன் ஊடாக நேரடியாக தமது பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்கவும் முடியும். எதிர்வரும் 04ம் திகதி நடைபெறவுள்ள இந்த ´ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்´ பொதுமக்கள் குறைகேள் மையத்தின் திறப்பு விழா நிகழ்வின் போது, 1000 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை ஜனாதிபதி வழங்கி வைக்கவுள்ளதுடன், அன்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தினை சூழவுள்ள பகுதிகளில் மரம் நடுகையும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில் பொது மக்கள் கலந்து கொண்டு ஜனாபதிக்கு தமது பிரச்சினைகளையும் தேவைகளையும் கூறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன், ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கி வைக்கப்படவுள்ளதென்றும் வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.