ravirajதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கடற்படையினர் மூவர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற வரலாற்றில் முதற்தடவையாக விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் நடைபெற்ற மிக நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அதிகாலை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குறித்த தீர்ப்பை இன்று அதிகாலை 12.15 அளவில் வழங்கியுள்ளார். இதன்பிரகாரம் இந்த வழக்கின் பிரதிவாதிகளான மூன்று கடற்படை உறுப்பினர்களும், வழக்கு விசாரணைகளை தவிர்த்து வந்த ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 6 பேருக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதி, உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கின் முறைப்பாட்டாளர் தரப்பு முதலாவது சாட்சியாளரான முன்னாள் பொலிஸ் கான்ஸ்ரபல் ப்ரிதிவி ராஜ் மனப்பேரியை வழக்கு நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2006 நவம்பர் 10 ஆம் திகதி காலை 8:45 அளவில் கொழும்பு நாரஹென்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அடையாளந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் உயிரிழந்தார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி கடற்படையினர் மூவர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, நேற்றுவரை 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. சாட்சியமளிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் நேற்றுகாலை முதல் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து தொகுப்புரைகள் ஆற்றுப்படுத்தப்பட்டன.

வழக்கொன்றின் இறுதி நாளில் அதிக நேரம் தொகுப்புரைகள் நடைபெற்ற முதலாவது வழக்கு இதுவாகும். இதனடிப்படையில் நேற்று காலை 10.45 க்கு ஆரம்பமான தொகுப்புரை நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்தது. அத்துடன் வழக்கொன்றின் தீர்ப்பு, நள்ளிரவு அறிவிக்கப்பட்டமையும் இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் 1985ஆம் ஆண்டு, வழக்கொன்றின் தீர்ப்பு இரவு 11.30க்கு வழங்கப்பட்டிருந்தது.