mahinda-desapriyaசொத்து விபரங்கள் பற்றிய ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பிக்காத அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 30ம் திகதி சொத்து விபரங்களை வழங்காத அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் 28ம் திகதி கூடி இது குறித்து விசேட ஆய்வுகளை நடத்த உள்ளனர். ஆய்வுகளின் பின்னர் சொத்து விபரங்களை வழங்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சொத்து விபரங்கள் பற்றிய அறிக்கை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் பல இன்னமும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததன் பின்னர் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சொத்து விபரங்களை ஒப்படைக்குமாறு ஏற்கனவே அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவித்துள்ள நிலையில் சிலர் வேண்டுமென்றே இவ்வாறு விபரங்களை வழங்க மறுத்து வருவதாக மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.