abilash“சுனாமி பேபி 81“என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் பொறுப்பெடுத்துள்ளனர்.

ஆழிப் பேரலையின்போது ஒன்பது தாய்மார்கள் உரிமை கோரிய சுனாமி பேபி 81 என்று அழைக்கப்படும் அபிலாஷின் கல்விச் செலவை விருட்சம் சமூக மேம்பாட்டு அமைப்பினர் சுனாமி இடம்பெற்று 12ஆவது ஆண்டு நினைவு நாளான இன்றிலிருந்து பொறுப்பெடுத்துள்ளனர். கல்முனை குருக்கள் மடத்தில் அமைந்துள்ள ஜெயராசா அபிலாஷின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில், ஜெயராசா அபிலாஷ_க்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் சிக்குண்டு உயிர்பிழைத்த இரண்டரை மாதக் குழந்தையான அபிலாஷ_க்கு ஒன்பது தம்பதியினர் உரிமை கோரியிருந்தனர். கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தற்போது குருக்கள் மடத்தில் வசித்துவரும் ஜெயராசா யுனிதா தம்பதிகளின் அயராத முயற்சியின் காரணமாக மரபணு பரிசோதனை மூலமாக நீதிமன்றத்தின் மூலம் தமது குழந்தை என்பதை நிரூபித்தனர்.

கடந்த 2004 ஆம் வருடம் உலகையும் இலங்கையின் கரையோரப் பகுதியையும் உலுக்கிய சுனாமி அனர்த்தத்தினால் இலங்கையில் மாத்திரம் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும், காணாமல் போயும் இருந்தனர். கல்முனையில் கடற்கரையோரப் பகுதியில் பிறந்த இரண்டரை மாதங்களேயான ஒரு குழந்தையும் அடங்கியிருந்தது. தென்னை மரவட்டுக்குள் சுனாமி அலை தூக்கிச்சென்று வைத்த பின்னர், அடுத்த அலையில் குப்பை மேடு ஒன்றின் அருகில் தூக்கி வீசப்பட்ட கைக் குழந்தையை அயலவர்கள் கண்டுபிடித்திருந்தனர்.

சுனாமி அனர்த்தத்தில் அல்லோல கல்லோலப்பட்டவர்கள் தமது பிள்ளைகளையும். உறவுகளையும் பிரிந்து வௌ;வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் தான் அபிலாஷ் என்ற குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கைக்குழந்தை அனுமதிக்கப்பட்ட விடுதி இலக்கம் 81 ஆகையால் இக்குழந்தை ‘சுனாமி பேபி 81’ என அன்று அழைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழந்தைக்கு உரிமைகோர எவருமில்லை என அறிந்த பலர் அந்தக் குழந்தையை தம்மோடு கொண்டு செல்வதற்கு, தங்களது குழந்தை எனக் கூறிக்கொண்டு பல பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு படையெடுத்துச் சென்றனர். ஒரு குழந்தைக்கு ஒன்பது பெற்றோர் உரிமை கோரியதை வைத்தியசாலை நிர்வாகம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. நீதிமன்றத்தின் மரபணு பரிசோதனை மூலம், குழந்தையின் உண்மைப் பெற்றோர் யார் எனக் கண்டறிந்து, குழந்தையை உரிய பெற்றோர்களிடம் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.