தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாதாமாதம் கூடுவதாக கூறப்பட்டிருந்ததது. ஆனால் பல மாதங்களாக கூட்டப்படவில்லை. இக் காலப்பகுதியில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு,
தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் சில அடிப்படைக் கொள்கைகளை வகுத்து அதற்கான மக்கள் ஆணையையும் பெற்றுக்கொண்டோம். முக்கியமாக வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஸ்டி அமைப்புமுறை, தமிழ் மக்களின் இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையிலான ஒரு சுயாட்சியே எமக்குத் தீர்வாக அமையும் என்பதை நாம் தெளிவாகக் கூறியிருந்தோம்.
இதன் அடிப்படையில், கூட்டமைப்பின் தலைமையிலான வடக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள அர சியல் தீர்வுத்திட்ட யோசனைகள், தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள், இப்பொழுது வடக்கு-கிழக்கு இணைக்கப்படமாட்டாது என்பதை சுமந்திரன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
ஒற்றையாட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். வடக்கு-கிழக்கு உட்பட முழு இலங்கையிலும் பௌத்தத்திற்கு முதலிடம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்? இந்த விடயங்களை எவ்வாறு கையாள்வது, கௌரவமான தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் கலந்துரையாடுவது அவசியமானது எனக் கருதுகிறோம்.
ஆகவே உடனடியாக எதுவித காலதாமதமும் இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்டி ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றோம். மிக நீண்ட நாட்களாக ஒருங்கிணைப்புக்குழு கூடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன், இன்றைய காலகட்டத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டு இந்தக் கூட்டத்தை மிக விரைவில் கூட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.