ratnasri-wickramanaikeஇலங்கையின் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

1933ஆம் ஆண்டு மே 5ஆம் திகதி பிறந்த அவர் தனது 83ஆவது வயதில் இன்று காலமானார். சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராக ரத்னசிறி விக்ரமநாயக்க இலங்கையில் 2000 முதல் 2001 வரையும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியிலும் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இயற்கை எய்திய முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவுக்கு நாளையதினம் பாராளுமன்றத்தில் விஷேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதற்கமைய அன்னாரது உடல் நாளை பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்படவுள்ளதாக அறிவிக்கப்படவுள்ளது. எனவே, நாளை காலை 10.30 தொடக்கம் 11.30 வரை, மறைந்த மூத்த அரசியல்வாதியான ரத்னசிறி விக்ரமநாயகவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கருஜெயசூரிய தெரியப்படுத்தியுள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 31ம் திகதி ஹொரனவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.