vimalதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். இன்றுகாலை 10.00 மணியளவில் அவர் அங்கு சென்றிருந்தார். கடந்த ஆட்சிக் காலத்தில் வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவங்ச பதவி வகித்தார்.

இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை தமது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கியமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதேவேளை, நேற்றைய தினமும் விமல் வீரவங்ச வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு சென்றிருந்தார். எது எவ்வாறிருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னதாக விசாரணைக்காக விடுக்கப்பட்ட அழைப்புக்களை விமல் வீரவங்ச ஏற்கவில்லை எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தகவல் வழங்கினர். இதனையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கமைய விமல் வீரவங்க இன்று வாக்குமூலமளிக்கச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.