இலங்கையில் தற்போதுள்ள மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை 2017ஆம் ஆண்டிற்குள் கவிழ்ப்பதே தனது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்றத்திற்குள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்த போதிலும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராயும்போது எதிர்காலத்தில் மாற்றத்தை தன்னால் ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கு இடையில் தற்போது முறுகல் நிலைமை காணப்படுவதாகவும், இந்த சூழ்நிலையில் இலங்கை முன்னோக்கி செல்ல முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் படி, இரண்டு முறைகள் மட்டுமே ஒருவர் ஜனாதிபதி அதிகாரத்தில் இருக்க முடியும் என்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ள காரணத்தால், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு மீண்டும் அரசத் தலைவராக பதவி ஏற்க முடியாத நிலை பற்றி சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, அரசத் தலைவராகும் எண்ணம் தனக்கு இல்லை என்றார். அரசத் தலைவராகாமல் கூட தன்னால் நாட்டை மீண்டும் ஆட்சி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார். மற்றொரு செய்தியாளர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், ஜனாதிபதியுடன் இணைந்து கடமையாற்ற ராஜபக்ஷ தயாரா என கேட்டபோது, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவ்வாறு செயல்பட முடியும் என்றால், 1970ஆம் ஆண்டு முதல் நன்றாக தெரிந்த ஒருவருடன் இணைந்து தனக்கு கடமையாற்ற முடியாதா என்று கேட்டார் மஹிந்த.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பிலும் கேள்விகள் எழுந்தன. அரசியலமைப்பில் மாற்றங்கள் தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராஜபக்ஷ கூறினார். (பிபிசி