யாழ்ப்பாணம், வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கடந்த இரு வருடங்களாக அதிபர் பதவி நிலையில் இருந்த திரு. நடராசா ரவீந்திரன் அவர்களின் பணி இடமாற்றம் தொடர்பாக மேற்படி பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளது. அதிலே பாடசாலையில் பல அபிவிருத்திகளை முனைப்போடு மேற்கொண்டு வந்த அதிபரின் இடமாற்றம் மனவருத்தம் அளிப்பதாகவும், இவரே தொடர்ந்தும் அதிபராக பணியாற்ற வேண்டுமென்றும் மக்கள் சார்பாக வலயக் கல்விப் பணிப்பாளரின் மேலான கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதிபருக்குரிய சகல தகைமைகளையும், பண்புகளையும் கொண்டு சிறப்பாக பணியாற்றி வந்த அவரை பணிமாற்றம் செய்வது பாடசாலையின் வளர்ச்சியின்பாலும் கல்விச் செயற்பாடுகளிலும் பின்னடைவுகளை சந்திக்க வேண்டிய நிலையேற்படும் என தாம் உணர்வதாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறாக தகுதியுடைய ஒரு அதிபரை கால அவகாசம் வழங்காது திடீரென மாற்றம் செய்திருப்பது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்து நிற்பதாகவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பாடசாலையின் வளர்ச்சியின் நிமித்தம் இவரால் செய்ய திட்டமிடப்பட்ட வேலைகளை இவர் செய்துமுடித்து பாடசாலை மேலும் வளர்ச்சியடைவதற்கு ஏற்புடையதாகவும் மாணவர்களது கல்வி செயற்பாட்டில் திடீர் தாக்கத்தை ஏற்படுத்தாதிருக்கவும் இவரை தொடர்ந்தும் இப்பாடசாலையில் அதிபராக ஒரு குறிப்பிட்ட காலம் பணியாற்றுவதற்கு விடுவித்துதவி மாணவர்களது கல்வி முன்னேற்றத்திற்கும் கிராம வளர்ச்சிக்கும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதோடு, பெற்றோர்கள் 90பேரின் கையெழுத்துடனும் மேற்படி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி கடித்தின் பிரதிகள் வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாணசபை முதலமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர்க்கு கையளிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.