sri-hettigeதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தமது இராஜினாமா கடிதத்தை அரசியலமைப்பு சபையிடம் கையளித்துள்ளார். ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் கற்கை நெறியைத் தொடரவுள்ளதால் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். தலைவர் பதவியிருந்து விலகினாலும், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் தாம் தொடர்ந்தும் செயற்படுவதாக சிறி ஹெட்டிகே தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் சிறி ஹெட்டிகே தனது கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்து நாட்டிற்கு திரும்பவுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அரசியலமைப்பு சபையின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிடுகையில், சிறி ஹெட்டிகேயின் இராஜினாமா கடிதத்தை தாம் ஏற்றுக்கொண்டதாக தெரிவத்துள்ளார். எனினும், பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக அவர் தொடர்ந்தும் செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.