யாழ். தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை அடுத்தவாரம் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞான சோதி தெரிவித்தார்.
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை பிரகடனப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார், அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாவிட்டால் நாட்டை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய மடியாது. ஏனெனில் இனங்களுக்கிடையில் முரண்பாடு நிலவுமாயின் முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு முன்நிற்கப்போவதில்லை. ஆகவே அங்கு நிலயான அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது. அதனால்தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. ஆகவே அவ்வாரத்திற்குரிய நிகழ்வுகள் தேசிய கொள்கைத்திட்டமாக வகுத்து செயற்படுத்தப்படவுள்ளன. குறித்த நல்லிணக்க வார நிகழ்வுகளில் சகல தரப்பினரும் பங்குகொள்ள வேண்டும்.
அதனை அடிப்படையாகக் கொண்டு பினவரும் நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சகல அரச திணைக்களங்களிலும் காலை வேளையில் வேலை அரம்பிக்கும் முன்னர் நல்லிணக்கம் தொடர்பிலான உறுதிமொழியினை வழங்குவதுடன் அது தொடர்பிலான உரைகளையும் நிகழ்த்த வேண்டும். அதற்கான சுற்றுநிருபம் சகல திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலைகளிலும் காலை ஆராதனையின் போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன் ஏனைய விசேட வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாடசாலைகளுக்குச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் இளைஞர் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மத்தியிலும் நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. குறித்த வாரத்தின் வேலைத்திட்டமாகக் கருதி இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பில் யாழ். மாவட்ட மக்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுகான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம். மேலும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகளில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.