வவுனியா, சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் 25 ஆயிரம் ரூபாய் கடனாகவும் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இந் நிலையில் தாம் தற்போதும் கடனாக வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி வரும் நிலையில், தம்மால் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாகவும் தாம் அவ்வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், தற்போது ஏனைய கிராமங்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களை தமக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். மழைக் காலங்களிலும் வெயில் காலங்களிலும் வானம் தெரியும் கூரையுடன் வசிக்கும் தமக்கு வீட்டுத்திட்டத்தில் வீடுகளை வழங்கவேண்டும் எனவும் அரச அதிகாரிகள், தமது நிலையை உணர்ந்து செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தனர். காலை 7 மணியில் இருந்து சுமார் 4 மணி நேரம் இவ் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.