sfdfகிளிநொச்சி, கனகபுரம் துயிலும் இல்லத்தில் உரிய அனுமதியைப் பெற்று பொது நினைவுத் தூபியை அமைக்க முடியும் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கனகபுரம் துயிலும் இல்லத்தில் பொது நினைவுத் தூபியை அமைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் 05 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். கனகபுரம் துயிலும் இல்லத்தில் பொது நினைவுத் தூபியை அமைப்பதற்கு நேற்றுக்காலை நடவடிக்கை எடுத்தபோது கரைச்சி பிரதேச செயலாளரின் தலையீட்டுடன் பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட சிலரிடம் நேற்றிரவு வரை கிளிநொச்சி தலைமையக பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு இன்று பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.