maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றதோடு பல்வேறு வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலைபேண்தகு யுகத்தின் மூன்றாண்டு உதயம் என்ற தொனிபொருளின் கீழ் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து இரண்டாண்டு பூர்த்தி கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்றுமாலை இடம்பெறுகின்றது. இந்தியாவின் ஆந்திரா மாநில முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இதன்போது அனைவருக்கும் சௌபாக்கியம் என்ற தொனிப்பொருளில் ஆந்திரா மாநில முதல்வர் உரையாற்றவுள்ளார். ஆந்திரா மாநிலத்தில் மூன்றாவது முறையாகவும் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நாரா சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் நீண்டகாலம் முதல்வராக பணியாற்றும் ஒருவராவார். இதேவேளை, ஜனாதிபதியின் பதவியேற்பின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை சிறீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று முற்பகல் இடம்பெற்றன.

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட இந்த பூஜையில், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம் சுவாமிநாதனும் கலந்துகொண்டிருந்தார். இதேவேளை, ஜனாதிபதியின் பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு, வவுனியா தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவிலிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், திருகோணமலை வெருகல் பகுதியிலுள்ள 150 குடும்பங்களுக்கு வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பட்டது.

யுத்தகாலத்தில் உறுதிகளை தொலைத்தவர்களுக்கே இவ்வாறு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பட்டதுடன், வெருகல் வைத்தியசாலையில் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று, இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில், திரைப்பட தணிக்கை சபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, நகர அபிவிருத்தி அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள மல்கம் பூங்கா இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.