name-boardஇராஜகிரிய வெலிக்கடைப் பகுதியில், அரசகரும மொழியை மீறும் வகையில் வீதிக் குறியீட்டு பலகையானது ஆங்கிலம், சிங்கள மொழியில் மாத்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக, அரச மொழிக் கொள்கையை பலப்படுத்தும் இயக்கத்தின் தேசிய கண்காணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இதற்கு முன்னர், சிங்களமொழியில் மாத்திரம் பொறிக்கப்பட்டிருந்தது, அதன்பின்னர், எமது அமைப்பினால் வீதி அதிகார அபிவிருத்தி சபைக்கும் அரச கரும மொழிப்பலப்படுத்தும் இயக்கத்துக்கும் 2017 ஜனவரி 4ஆம் திகதி கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இவ்விடயம், தொடர்பில் சரியான தீர்வு கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் அனுப்பிய கடிதத்தின் பின்னர், வீதி குறியீட்டு பலகையானது தற்போது ஆங்கில மொழியிலும் பொறிக்கப்பட்டு காணப்படுகின்றது. இவ்வாறு ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டு, தமிழ் மொழியில் குறிப்பிடப்படாமையானது, அரசகரும மொழிக்கொள்கையினை மீறும் செயலாகும்.

ஆதலால் இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் அரசகரும மொழிக்கொள்கையை பலப்படுத்தும் இயக்கமும் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென அரச மொழிக் கொள்கையை பலப்படுத்தும் இயக்கம் அறிவித்துள்ளதாக அவ் அமைப்பின் தேசிய கண்காணிப்பாளர் மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.