chandrikaநல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவையை, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நிராகரித்தமை பிழையானது என்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னதாக கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், 11 பேர் அடங்கிய நல்லிணக்கப் பொறிமுறைகளுகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி (சீ.டி.எப்), தனது இறுதியறிக்கையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும்; வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கவேண்டும்; விசாரணைகள் முன்னெடுக்கப்படும் ஒவ்வோர் அமர்விலும், வெளிநாட்டு பிரதிநிதியொருவர் பிரசன்னமாய் இருக்கவேண்டும் ஆகியன பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரிந்துரைகளை, நீதியமைச்சர் விஜயதாஸ நிராகரித்துள்ளார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?” என்றார்.

இதற்குப் பதிலளித்த சந்திரிகா, “இந்தச் செயலணியை நான் உருவாக்கவில்லை. என்னுடைய அலுவலகமும் செய்யவில்லை. அரசாங்கத்தின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அமைச்சரவையின் அங்கிகாரத்துடனேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. “அரசியலமைப்பு, யுத்தக்குற்றம் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்து பரிந்துரைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பரிந்துரைகளுக்கு பதிலளிக்கும் கடப்பாடு, அரசாங்கத்துக்கு இருக்கிறது.

எனினும், இந்தச் செயலணிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம், பரிந்துரைகளை செய்யமுடியாது. “அரசாங்கம் என்ன செய்யவேண்டுமென்று நான் கூறமுடியாது. எனினும், இந்தப் பரிந்துரைகளை நீதியமைச்சர் வியஜதாஸ ராஜபக்ஷ நிராகரித்தமை பிழையானது. “பரிந்துரைகளின் பிரகாரம் யுத்தக்குற்றம், வெளிநாட்டு கண்காணிப்பாளர் உள்ளிட்ட பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்து கலந்துரையாடியதன் பின்னர் நடவடிக்கை எடுத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.