fddfமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் வைத்து மூன்று தமிழ் பண்ணையாளர்களை பிக்குமார் தாக்கிய சம்பவ இடத்திற்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சென்றிருந்தார்.

இதன்போது தாக்குதலுக்குள்ளான பண்ணையாளர்கள் உட்பட குறித்த பகுதியிலுள்ள பண்ணையாளர்களை சந்தித்ததுடன், சம்பவத்தையும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இருந்து மயிலத்தமடு, மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மாடுகளை துப்பாக்கியால் சுடுவது, கால்நடைகளை கடத்துவது, பெரும்பான்மை இனத்தவரினால் தமிழ் பண்ணையாளர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டுடிருக்கின்றது. காலம் காலமாக குறித்த பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்கள் 372க்கு மேல் தங்களின் கால் நடைகளை வைத்துள்ளார்கள். கடந்த மஹிந்த ஆட்சி தொடக்கம் தற்போதைய மைத்திரி ஆட்சி வரை தமிழ் பண்ணையாளர்களின் சுமார் 1100 கால்நடைகளை கடத்தியிருக்கின்றார்கள். கடந்த வருடத்தில் கால் நடைக்கு தண்ணீர் கொடுக்க வந்த மற்றுமொரு தமிழ் பண்ணையாளர், பெரும்பான்மை இனத்தவரினால் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றார். மாந்திரி ஆற்றில் சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெறுகின்றது.

இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்…? மட்டக்களப்பின் எல்லையிலுள்ள மண்ணை சட்டவிரோதமாக பெரும்பான்மை இனத்தவர்கள் கொள்ளையடிக்கின்றார்கள். சட்டவிரோத மீள்குயேற்றப் பகுதிக்குள் இரண்டு விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. முற்று முழுதாக தமிழர்களின் காணிக்குள் சட்ட விரோதமான முறையில் விகாரைகள். குறித்த மயிலத்தமடு மாதவணைப் அண்மித்த பகுதிகளில் சட்ட விரோத குடியேற்றங்களையும், நிரந்த வீடுகளையும் அமைப்பதை நிறுத்த நீதிமன்ற தடை உத்தரவு இருந்தபோதும், குறித்த விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் வாழ்ந்த, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளை குறிக்க வேண்டும் என பலர் பேசுகின்றார்களே தவிர, அதற்கான முன்னெடுப்புக்கள் கடந்த காலங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மட்டக்களப்பின் எல்லை காவலர்களாக பல துன்பங்களையும், பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் எமது தமிழ் பண்ணையாளர்களுக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த மயிலத்தமடு, மாதவணை பண்ணையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, அதற்கான தீர்வினை உடனடியாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

dfew dsfd