mulaiமுல்லைத்தீவு   மாவட்டத்தில்  கரைத்துறைப்பற்று பிரதேச  செயலாளர்  பிரிவிற்கு  உட்பட்ட  தண்ணிமுறிப்புக்குளத்தில் நேற்று  நள்ளிரவு  மீன்பிடி  நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ், முஸ்லிம்  மீனவர்களின் மீன்பிடிப்படகு   ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன்  மோட்டார் சைக்கிள்   ஒன்றும்   சேதமாக்கப்பட்டு    குளக்கட்டில் இருந்து  தூக்கி வீசப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,நேற்று  முன்தினம் மாலை வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக  சென்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களில் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று குளக்கட்டில் வைத்து சேதமாக்கப்பட்டு  தூக்கி வீசப்பட்டிருந்ததாகவும்  மறுநாளான நேற்று அதிகாலை மீனவர்களின் மீன்பிடி படகொன்றும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

வெலிஓயா பகுதியிலிருந்து  வந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் சிங்கள மீனவர்களாலேயே   இது  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மீனவர்கள் குற்றம்சுமத்தும் அதேவேளை  இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தாம் முறையிட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

குறித்த குளத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிங்கள மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள்  இடம்பெற்றுவரும் அதேவேளை அடிக்கடி இது தொடர்பான பிணக்குகள் இடம்பெறுவது வழமையாக காணப்படுகின்றது.

மேலும் இந்த குளத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவை சேர்ந்த மீனவர்கள் மட்டும்தான் மீன்பிடிக்க உரிமை உள்ளது எனவும் வெலிஓயா பகுதி  சிங்கள மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடமுடியாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது