uraniயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில், அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள ,  ஊறணி கடற்பிரதேசம்,  இடம்பெயர்ந்துள்ள மக்கள் கடற்தொழிலில் ஈடுபடுவதற்காக இன்று பொங்கல் தினத்தன்று ராணுவத்தினாரல் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நல்லிணக்க வாரத்தையொட்டி, இந்த நிகழ்வு இடம்பெற்றிருக்கின்றது.valiநாட்டில் ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் மேம்படுத்துவதற்காக இன மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனவரி 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான நல்லிணக்க வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. வருடந்தோறும் இந்த நல்லிணக்க வாரம் கொண்டாடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது,

சுமார் 27 வருடங்களின் பின்னர், ஊறணி கடற்பிரதேசம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது,

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந்திருந்த குடும்பங்களுக்காக, மாவிட்டபுரம் நல்லிணக்கபுரத்தில் குடியேற்றப்பட்டுள்ள 130 குடும்பங்கள் இதன் மூலம் பயனவடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஆயினும் இப்போது கையளிக்கப்பட்டுள்ள கடற்பிரதேசத்திற்கு அருகில் மக்கள் எவரும் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரதேசத்தை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்ற ராணுவம் கடற்கரையோரம் முழுவதையும் முள் கம்பி வேலி அமைத்து எவரும் கடற்பரப்பிற்குள் செல்ல முடியாதவாறு தடுத்திருக்கின்றது.
ஊறணிக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு சிறிய இடத்தில் இந்த முள் கம்பி வேலி அகற்றப்பட்டு அமைக்கப்பட்டுள்ள இடைவெளியின் ஊடாக மட்டுமே நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த மக்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குள் செல்ல முடியும்.

இப்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக மட்டுமே போய் வர முடியும். அதேநேரம் இந்த இடத்தில் மீன்பிடிப்பதற்கான படகுத்துறையோ அல்லது மீன்பிடி இறங்கு துறையோ கிடையாது என தெரிவித்துள்ள வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பகுதிக்குள் மீன்பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் ஒன்றிரண்டு குடும்பங்களைத் தவிர ஏனைய குடும்பங்கள் மீனவ குடும்பங்கள் அல்ல என்றும் அவர்கள் கடலில் பிடிக்கப்படுகின்ற மீனை வாங்கி விற்பனை செய்கின்றவர்கள் என்றும் அவர் கூறுகின்றார்.

மயிலிட்டி, தையிட்டி போன்ற இடங்களில் அமைந்துள்ள மீன்பிடி இறங்கு துறைகளும், படகுத்துறைகளும், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் இன்னும் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இவற்றை ராணுவம் மீள கையளிக்க வேண்டும். அந்தப் பிரதேசங்களில் அந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் குணபாலசிங்கம் கூறினார்.

இந்தப் பிரதேசத்தைப் படிப்படியாகப் பொதுமக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட ராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, யாழ் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கடற்படை இராணுவ அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.