batti 01தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்தே வாக்குகேட்டது.
ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றே நாங்கள் கேட்கின்றோம்.

அதனையே தமிழ் மக்கள் பேரவையும் கோருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.batti 02தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ள ‘எழுக தமிழ்’ நிகழ்வு தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் சந்திப்பு நேற்று (14) தைப்பொங்கல் தினத்தன்று நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுரேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது ´எழுக தமிழ்´ தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் பதில்கள் வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் : தமிழ் மக்களுக்கு இந்த பொங்கல் நாள் மகிழ்ச்சியான பொங்கல் நாள் என்று கூறமுடியாது. பல்வேறு போராட்டங்களை நடத்தும் ஆண்டாகவே மாறிவருகின்றது. கடந்த ஆண்டு ஒரு விமோசனம் கிட்டும் என எதிர்பார்த்தனர்.
இந்த ஆண்டாவது விமோசனம் கிட்டும் என்று கருதினர். ஆனால் அனைத்து வழிகளிலும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிள் போராட்டம், மாணவர்கள் தொடக்கம் தமது காணிகளை விடுவிக்க கோரி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர்.
சிறையில் உள்ள தமது பிள்ளைகளை விடுவிக்குமாறும், கணவன்மாரை விடுவிக்குமாறும் போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.

இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் தமிழ் மக்களுக்கான எந்தவித தீர்வினையும் வழங்காத நிலையில் இருந்த அரசினை சிறுபான்மை சமூகம் 2015ஆம் ஆண்டு மாற்றியமைத்தது.

பல எதிர்பார்ப்புகளுடனேயே இந்த ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினர். ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி மூன்றாவது வருடம் ஆரம்பித்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் கால இழுத்தடிப்புக்கூடாக இழுத்துச்செல்லப்படுகின்றதே தவிர நிறைவேற்றப்படவில்லை.

இந்தவேளையில் தமிழ் மக்களுக்கான நீதியான தீர்வினைக்கேட்டு தமிழ் மக்கள் பேரவை ஊடாக வடகிழக்கில் எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்படுகின்றது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் இந்த எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்படும்.

இதில் உண்மையில் உணர்வுள்ள அனைத்து தமிழ் பற்றாளர்களும் தமிழ் பேசும் உறவுகளும் பங்குகொள்ள வேண்டும்.

தமிழ் தலைமைகள் வரலாற்று ரீதியாக இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக குரல் கொடுத்து வந்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி கூட மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட போது தோற்றம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

எழுக தமிழ் என்பது தமிழ் பேசும் சமூகம் சார்ந்த உரிமைக்கான குரலாக இருக்கும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியில் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை முன்வைத்தே வாக்கு கோரியது.

தமிழ் மக்களிடம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்றே தமிழ் மக்கள் பேரவை கோருகின்றது. அதுகூட இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வடமாகாண சபை கூட அரசியல் தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இதனையே நாங்கள் நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம்.

தமிழ் தேசிய பற்றாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் நாங்கள் உணர்ச்சியூட்டுவதாக தெரிவிக்கின்றனர். தமிழர்களின் அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் உணர்ச்சிகளையூட்டியதன் காரணமாக தமது மக்களின் உரிமைக்காக ஆயுதம் தூக்கிப்போராடினார்கள்.

அந்த போராடிய இளைஞர்களை காலப்போக்கில் துரோகிகளாக பார்க்கும் நிலையும் வரலாம். நாங்கள் இளைஞர்களை உணர்ச்சியூட்டவில்லை.

எழுக தமிழ் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முரண்பட வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் புளோட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். என்பன இதற்கு ஆதரவு வழங்கிவருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு தமிழரசுக்கட்சி மற்றும் டெலோ கட்சி கிழக்கில் ஆதரவு வழங்கவுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு இணைப்பு என்பதில் நாங்கள் என்றும் உறுதியாகவுள்ளோம்.

அதற்காகவே தமிழ் மக்கள் இந்த நாட்டில் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் போராட்டங்களை நடாத்தினர்.

இது தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களாக இருக்கலாம் முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட சிவில் அமைப்புகளாக இருக்கலாம் தமிழ் மக்கள் பேரினவாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் வலியை உணர்ந்தவர்கள், வடகிழக்கு இணைக்கப்படும்போது எமக்கு அடுத்ததாகவுள்ள முஸ்லிம் மக்களுக்கும் எந்த அநீதியையும் நாங்கள் ஏற்படுத்தமாட்டோம்.

அதனை முஸ்லிம் மக்களும் அரசியல் தலைமைத்துவங்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் எந்த குழப்பமும் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

வடகிழக்கு இணைக்கப்படும் போது முஸ்லிம் மக்களின் நியாயமான அவர்களுக்குரியதை நாங்கள் தாராளமாக விட்டுக்கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

batti 03batti 04