தனது ‘மக்கள் நலப் பணி’ குறித்த விரிவான அறிவிப்பை தான் நாளை திங்கள்கிழமை வெளியிடவுள்ளதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபா புதிய அரசியல் கட்சியை தொடங்க வேண்டுமென வலியுறுத்தி அவரது வீட்டின் முன்பாக சில அதிமுக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரண்ட வண்ணமுள்ளனர்.இந்நிலையில், இன்றும் சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள தீபாவின் வீட்டின் முன்னர் அதிமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழுமியிருந்தனர். அவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் உரையாடிய தீபா கூறுகையில், ‘அனைவரும் எதிர்ப்பார்க்கும் எனது மக்கள் நலப்பணி குறித்து விரிவான அறிவிப்பை நாளை திங்கட்கிழமை வெளியிடுவேன்’ என்று தெரிவித்தார்.
மேலும், தீபா கூறுகையில், அதிமுக தொண்டர்களை தான் நாளை மறுநாள் முதல் செவ்வாய்க்கிழமை சந்திக்கும் திட்டமுள்ளதாகவும் கூறினார்.
தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா காலமானாதை தொடர்ந்து நடைபெற்ற அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா பதவியேற்றுக் கொண்டார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவருடைய சகோதரர் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு சிலர் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த அறிவிப்பை நாளை வெளியிடப் போவதாக தீபா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.