Varatchiஎதிர்வரும் தினங்களில் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கு சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரமவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.இதற்காக தொற்று நோய் பிரிவு, டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலையை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது பேசப்பட உள்ளதுடன், இதன்போது எடுக்கப்படும் தீர்மானங்கள் சுகாதார அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அதன்படி இது தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் சுகாதார அமைச்சரினால் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம கூறினார்.

இதேவேளை காணப்படுகின்ற வறட்சி நிலைக்கு முகங்கொடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ;மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

விஷேடமாக மக்களின் வாழ்வாதாரம் குறித்து அதிக அவதானம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.