ezhuka thamizhமட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21.01.2017) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கே.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த வசந்தராஜா, ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர், இலங்கை தொடர்பில் ஆராய முன்பாகவும், இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பாகவும் கிழக்கில் எழுக தமிழ் நிகழ்வு நடாத்தப்பட வேண்டும் என கடந்த வருடம் தமிழ் மக்கள் பேரவை தீர்மானித்தது.

இதற்கமைய அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எழுக தமிழ் நடைபெறும் தினத்திற்கு அண்மித்த தினத்தில் உழவர் தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

எனவே அந்த விழா சிறப்பாக நடைபெற இடமளிக்கும் வகையிலும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பதில் பாடசாலை நாள் ஒன்றை எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள அதே தினத்தில் நடாத்துவதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவிக்க முடிவு செய்துள்ளமையால், பாடசாலை நிகழ்வுகளுக்கு எழுக தமிழ் குந்தகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த நிகழ்வினை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் எழுக தமிழ் நிகழ்வுகளை நடாத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.