dsfdவவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணி இராணுத்தால் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 22 ஏக்கர் காணியை இராணுவம் கையளித்துள்ளது.

மிகுதி 2 ஏக்கர் காணி இராணுவ வசமுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 60 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது. புதிய நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டபோது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் இராணுவம் அப்பகுதியில் நிலைகொண்டிருந்தது. தற்போது இராணுவம் தமது தேவைக்காக அமைத்திருந்த கட்டிடங்களை அகற்றி வருவதுடன் தளபாடங்களையும் அப்புறப்படுத்தி காணியை கையளித்துள்ளது. இக் கையளிப்பு நிகழ்வில் பிரதேச செயலாளர் கா.உதயராசா, அப்பகுதி கிராம அலுவலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.