american shipஅமெரிக்க கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹொப்பர், நான்கு நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்க நாசகாரி கப்பலுக்கு, கொழும்புத் துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது.

விமான எதிர்ப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, மற்றும் தரை இலக்குகளைத் தாக்கும் பலநோக்கு போராயுத வசதிகளைக் கொண்ட இந்த நாசகாரி கப்பல், பேர்ள் ஹாபரிலிருந்து இயங்கி வருகிறது. தற்போது இந்த நாசகாரி, இந்தோ-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதிவரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் அமெரிக்க நாசகாரி கப்பல், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் பங்கேற்கவுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் ஐந்தாவது அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவாகும். ஏற்கனவே யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ், யுஎஸ்எஸ் நியூ ஓர்லியன்ஸ், யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ஆகிய அமெரிக்க போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கும், யுஎஸ்எஸ் சோமசெற் போர்க்கப்பல், திருகோணமலை துறைமுகத்துக்கும் கடந்த ஆண்டில் பயணம் மேற்கொண்டிருந்தன.

அதேவேளை கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம், இலங்கை கடற்பரப்புக்கு அருகாக பயணத்தை மேற்கொண்டிருந்தபோது யுஎஸ்.எஸ் ஹொப்பர் நாசகாரியின் மாலுமி ஒருவருக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக, இந்தப் போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழைந்திருந்தது. அந்த மாலுமி இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.