neduntharakaiயாழ். நெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்றுமுதல் குறிகாட்டுவானிலிருந்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பிறைசி கட்சிசன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சேவையில் ஈடுபடுவதற்காக உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 150 மில்லியன் ரூபா செலவில் இந்த நெடுந்தாரகை படகு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் 80 பயணிகள் பயணிக்கக்கூடிய போதிய வசதிகளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.

இயந்திரமும் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு குறித்த படகினில் பொருத்தப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கமைய இச்சேவை, பூர்த்தி செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.