vvvvvசுவிட்ஸர்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உலக பொருளாதார மாநாட்டு மத்திய நிலையத்தில் உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கோசினுடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை முகம்கொடுக்கக் கூடிய வறட்சியான காலநிலையால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் சிரமங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நிலவும் வறட்சியால் வருங்கால நுகர்வுக்கான அரிசி மற்றும் மின்சார உற்பத்திக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும் என பிரதமர் இதன்போது உலக உணவுத் திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்களை பாதுகாக்க மானியங்கள் மற்றும் உதவித் தொகைகளையும் பெற்றுக் கொடுக்கவேண்டி ஏற்படும் எனவும் பிரதமர் எடுத்துக் கூறியுள்ளார்.

இதேவேளை, வறட்சியால் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ள தமது அமைப்பு பூரண ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்க முன்நிற்கும் என, எதரின் கோசி தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதன்போது அதுபற்றி விரிவாக கலந்துரையாட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.