அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற நிலையில் வெள்ளை மாளிகையில் கோலாகலமாக விழா நடைபெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் 8ம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகை அமைந்துள்ள தெருவில் உள்ள பிளேர் ஹவுஸில் தங்கினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க நேரப்படி நேற்றுக்காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்றனர். பின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளை மாளிகையின் தெற்கு போர்டிகோவில் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிக்செல் ஆகியோர் சிறப்பு தேநீர் விருந்தளித்தனர்.
காலை 10 மணியளவில் டிரம்ப், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் பென்ஸ் ஆகியோரை ஒபாமா, விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். அமெரிக்க நேரப்படி முற்பகல் 11 மணியளவில் (இலங்கை நேரப்படி நள்ளிரவு சுமார் 12 மணி அளவில்) பதவியேற்வு விழா தொடங்கியது. விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப், துணை அதிபராக பென்ஸ் மற்றும் அமைச்சர்கள் பைபிள் மீது ஆணையிட்டு, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்களுடன் டிரம்ப் மதிய உணவு விருந்தில் பங்கேற்றார்.
பின்னர் அதிபராக முதல் உரையை நிகழ்த்தினார். முன்னதாக லிங்கன் நினைவு இல்லத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றுபட்ட அமெரிக்காவாக நாம் அனைவரும் மாற வேண்டிய தருணம் இது. அமெரிக்காவை மிகச்சிறந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நமது மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அமெரிக்கா மிகச்சிறந்த இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும்.
இதற்காக நான் மிகக் கடினமாக உழைப்பேன் என்று உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நமது பணிகளை நாம் திரும்ப பெற வேண்டும். நமது வேலைவாய்ப்புகளை மற்ற நாட்டினர் தொடர்ந்து செய்ய நாம் அனுமதிக்கக்கூடாது. நமது மிகச்சிறந்த ராணுவத்தை இன்னும் சிறப்பானதாக கட்டமைக்க வேண்டும். நமது எல்லைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்கான இயக்கம் தொடங்கி விட்டது. இது மிகச்சிறப்பானது என்று அவர் குறிப்பிட்டார்.
அவருடன் மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜார்ட் குஷ்னர், மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். மகள் இவாங்கா பற்றி டிரம்ப் பேசும்போது : எனது மகள் இவாங்கா மிகவும் சிறப்பான ஒருவர். மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். நல்ல வாழ்க்கை துணையை தேர்வு செய்தார். அவரது கணவர் குஷ்னரை நான் அவரிடம் இருந்து திருடிக்கொண்டேன். அவர் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் பணி அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய ஒபாமா அமெரிக்க மக்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ளார். அதில், அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதி பதவி ஏற்று இருக்கும் இந்த வேளையில் 44வது ஜனாதிபதி பணியாற்றி விடைபெறும் நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்த 8 ஆண்டுகளில் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன். உங்களிடம் இருந்து அதிகம் கற்றுள்ளேன். என்னை மிகச்சிறந்த அதிபராக மாற்றியது நீங்கள்தான். மிகச்சிறந்த மனிதனாகவும் உங்களால்தான் நான் மாறினேன். தனிநபரை நம்பி அமெரிக்கா இல்லை. நமது ஜனநாயகத்தின் மிகச்சிறந்த வார்த்தை நாம். அந்த நாம் தான் மக்கள். அனைத்தையும் நாம் கடந்து வருவோம். ஆம். நம்மால் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா வழங்கும் எச் 1 பி விசா வினியோகத்தில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இது தொடர்பான, மசோதா விரைவில் செனட் சபை முன் தாக்கல் செய்யப்படவுள்ளது. மூத்த செனட்டர்கள் சக் கிராஸ்லி, டிக் டர்பன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த சட்டத்திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு படிக்க வரும் திறமையான வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிக சலுகை அளிக்கப்படும். அதேசமயம் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவின் மிக அதிக வயதான ஜனாதிபதி 70 வயது டிரம்ப் பதவி ஏற்றுள்ளார். 1987ல் அமெரிக்க ஜனாதிபதியாகும் ஆசை டிரம்ப் மனதில் உதித்தாலும் 2011ல் வெள்ளை மாளிகை விருந்தில் ஒபாமாவால் கேலி செய்யப்பட்டது ஆசையை வெறியாக மாற்றியது. 2000ம் ஆண்டில் சீர்திருத்த கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஓட்டுப்பதிவுக்கு முன் போட்டியில் இருந்து விலகினார். டிரம்ப் மிகப்பெரிய தொழிலதிபதிர். அவரது சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி. டிரம்ப்பிற்கு 3 மனைவிகள். தற்போது அவருடன் இருப்பது மெலானியா. அவருக்கு 3 மகன்கள், 2 மகள் உள்ளனர். டிரம்பின் முன்னாள் மனைவிகள் இருவரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.