நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை கூறவில்லை என்பதால், அது தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டிருக்காது என நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும், பிரித்தானியாவுடன் தனியான வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை என்றால், நாம் இரு நாடுகளின் பொருளாதார விடயங்களில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனிடையே பொதுநலவாய நாடுகளில் வர்த்தக மற்றும் முதலீட்டை வலுப்படுத்துவது தொடர்பாக நியூசிலாந்துடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
அதேவேளை கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பயிற்சி பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இல்லை என்பதால், அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில், சீன அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பிரதிபலனாக ராஜபக்ச ஆதரவாளர்கள் இடையில் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.