chinabay oilசீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டு த்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது.

வறட்சியை எதிர்கொள்வதற்காக மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு, இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் உள்ள சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த போதும், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எண்ணெய்க் குதங்களை மீள வழங்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த வாரம் புதிய இந்தியத் தூதுவர் பொறுப்பேற்கும் வரை இதுதொடர்பான நடவடிக்கைகளை நிறுத்திவைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். எனினும், மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் டீசலை சேமித்து வைப்பதற்கு தாங்கிகள் அவசரமாகத் தேவைப்படுவதால், முத்துராஜவெலவில் 4தாங்கிகளை அமைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.

முதலாவது எண்ணெய் தாங்கியை அமைப்பதற்கு கோரப்பட்ட கேள்விப்பத்திரம் மூடப்பட்டுள்ளது. இதற்கு 400 மில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத் தாங்கிகள் ஒவ்வொன்றும் 15 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை சேமித்து வைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளன. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலை வாங்கி வந்த இலங்கை மின்சார சபை, இம்மாதம், மேலதிகமாக 60ஆயிரம் மெட்ரிக்தொன் டீசலை வழங்குமாறு கோரியிருக்கின்றது.