காணாமற்போனோரின் உறவினர்களால் வவுனியாவில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில் இறுதியான முடிவை அறிவிக்குமாறும், அரசியல் கைதிகளாக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏ-9 வீதியிலுள்ள வவுனியா பிரதான தபாலகம் முன்பாக காணாமற்போனரது உறவினர்கள் நேற்றுமுதல் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமற்போனோரின் உறவினர்கள் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் தங்களின் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதேவேளை உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை தொடர்பில் இன்று பரிசோதிக்கப்பட்டது. உணவு தவிர்ப்பு போராட்டத்தில் வயோதிபர்களே அதிகமாக கலந்துகொண்டுள்ள நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் சிரேஸ்ட மருத்துவ அதிகாரி தலைமையிலான குழுவினர் உண்ணாவிரதம் இடம்பெறும் இடத்தில் மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.