மொங்கோலியா, லிதுவேனியா, பனாமா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் ஆகியோர் தமது நியமனக் கடிதங்களை இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தனர்.
மொங்கோலியா நாட்டின் தூதுவர் கொன்சிக் கேன்ங்போல்ட், லிதுவேனியா தூதுவர் லைமொனாஸ் தலத் கெல்ப்ஸோ, பனாமா தூதுவர் சொர்வியோ சௌல் சனுடியோ பெதன்கோர்ட் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். நாட்டில் மீண்டும் ஒரு மோதல் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் கடைப்பிடித்துவரும் பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, நல்லிணக்கம் ஆகிய மூன்று முக்கிய இலக்குகள் குறித்து ஜனாதிபதி தூதுவர்களுக்கு விளக்கியுள்ளார். மேற்படி நான்கு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே இருந்துவரும் நெருங்கிய இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த நட்புறவையும் இருதரப்பு பொருளாதார கூட்டுறவையும் மேலும் பலப்படுத்த புதிய தூதுவர்கள் பாடுபடுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச மன்றங்களில் இந்த நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையே இருந்து வரும் நெருங்கிய கூட்டுறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்நாடுகள் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்துள்ளார். எமது நாட்டில் ஏற்கனவே சேவை செய்துள்ள புதிய இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து இலங்கையைப் பற்றி நன்கறிவார் என்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்துவரும் நீண்டகால நட்புறவு அவரது காலப்பகுதியில் மேலும் பலப்படும் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்