முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் இன்றுமுற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்க இருந்த கட்டடத் தொகுதி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகை தராததன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 243 ஏக்கர் காணி, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டன 300பேருக்கான தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தளபதி, மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி காலநிலை சீரின்மையால் தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.