பின்தங்கிய கிராமங்களில் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்கும் முகமாக கிராமங்கள் நோக்கிய சமூகப் பயணத்தில் இலண்டன் நெடுந்தீவு விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையில் “கல்வியால் எழுவோம்” செயற்றிட்டம் -08 தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில், சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய அதிபர் திரு சசிக்குமார் தலைமையில் நேற்று முன்தினம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வவுனியா நகர சபையின் முன்னைநாள் உபநகர பிதாவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமாகிய கௌரவ க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் தனது உரையில் தெரிவிக்கையில், முப்பது வருட அகிம்சைப்போராட்டம் , முப்பது வருட ஆயுதப்போராட்டம் ஆகியவற்றைக் கடந்து இன்றைய காலகட்டத்தில் எமது தமிழ் மாணவர்களின் கல்வி நிலை பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. ஆரம்பகால திறமைகளையும் வரலாறுகளையும் எமது பண்பாடுகளையும் சாதனைகளையும் நினைவில் கொண்டு வருங்காலத்தில் இந்நாட்டில் எம் சிறார்களின் கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகள், ஒழுக்க விழுமியங்கள் ஆகியவற்றை மேலோங்கச் செய்யவேண்டும். அதிலும் இப்பாடசாலையில் எனக்கு தனிப்பட்ட முறையில் அக்கறையும் சில கடமைகளும் இருக்கின்றன. ஏனெனில் நானும் இங்கு கல்வி கற்றே இன்று இந்த நல்ல நிலையில், ஒரு சமூக அக்கறையுள்ளவனாக உருவாகி இருக்கின்றேன்.
இது போல அனைத்து மாணவச் செல்வங்களும் சமூகத்தில் நல்ல மதிப்புள்ளவர்களாக திறமையுள்ளவர்களாக வரவேண்டும். அதற்கு என்னாலான அனைத்து ஆதரவுகளையும் தருவதற்கு தயாராக இருக்கிறேன். இப்பகுதி வாழ் என் உறவுகள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை கொண்டு செல்கின்றனர். குறிப்பாக பொருளாதாரம், போக்குவரத்து இன்னும் பல துன்பங்களை எதிர்கொண்டு இருக்கின்ற நேரத்தில் இம் முறை இயற்கையும் எம்மை சோதித்துப்பார்க்கிறது. இதனால் எனது உறவுகள் மத்தியில் கல்வி நிலை பாதிக்கப்படக்கூடாது என்ற ஆதங்கத்தில் இந்த கடமையை செய்வதற்கு நானாக முன்வந்திருக்கிறேன்.
என் இரத்த உறவுகளுக்கு இந்த உதவிகளை எங்களினூடாக வழங்குவதற்கு முன்வந்த பிரித்தானியா விளையாட்டு கழகத்தின் தலைமைக்குழுவினரான கனகரத்தினம் மோகன்ராஜ், தர்மலிங்கம் மணிபல்லவன், செல்வரத்தினம் சுரேஸ் கருணாநிதி இனியன் ஆகியோருக்கு எனது இளைஞர் கழகமான தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினருக்கும், வாய்ப்பளித்த பாடசாலைச் சமூகத்திற்கும், பழைய மாணவர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் இதயபூர்வமான நன்றிகள்.
இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன், கழகத்தின் உறுப்பினர்களான திரு வ.பிரதீபன், திரு ஜெ.கஜுரன் ஆகியோருடன் கிராம சமூகமட்ட அமைப்புகளின் தலைவர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா விளையாட்டு கழகத்தின் ஆதரவில் கல்வியால் எழுவோம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் பாடசாலை சிறுவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்விற்கு இங்கிலாந்தில் இருந்து அனுசரணை வழங்கிவரும் விளையாட்டுக்கழக தலைமைக்குழுவினரான கனகரத்தினம் மோகன்ராஜ், தர்மலிங்கம் மணிபல்லவன், செல்வரத்தினம் சுரேஸ், கருணாநிதி இனியன் ஆகியோருக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.