மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக ஆயித்தியமலை கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட கற்பானைக் கிராமத்தில் அமைந்துள்ள மூன்று சிறிய குளங்கள் நேற்று உடைப்பெடுத்துள்ள நிலையில் நேற்றுமாலை பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு உடன் விரைந்து அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிப்படைந்து அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில் இது குறித்து பா.உ வியாழேந்திரன் அவர்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உட்பட மாவட்ட பிரதேச அதிகாரிகளுடனும் இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். கற்பானைக் கிராமத்தில் உள்ள, கற்பானைக்குளம், கற்பானைக் கிராம எல்லையில் உள்ள இன்னும் இரு சிறிய குளங்களுமாகிய மொத்தம் மூன்று குளங்களே அதிகமழை காரணமாக உடைப்பெடுத்துள்ளன. இதனால் ஆயித்தியமலைக்கும், கரடியனாற்றுக்குமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.