இறுதிப் போர் நடைபெற்ற புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளிலுள்ள பதுங்கு குழிகளை மூடி, உக்காத பொருட்களை அகற்றித் தருமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலரிடம் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் காலத்தில் போரில் ஈடுபட்டவர்களினாலும் தற்காப்பைத் தேடிய மக்களினாலும் ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகள் இந்த பகுதியில் அமைக்கப்பட்டன. அவற்றில் பல இன்றுவரை மூடப்படாமல் இருப்பதன் காரணமாக குறித்த குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதன் காரணமாக டெங்கு போன்ற அபாய நோய்கள் ஏற்படுத்தும் வகையில் நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகின்றது. நீண்ட மண் அணைகளின் காரணமாக மழை வெள்ளம் தேங்கி நிற்பதன் காரணமாக விவசாய முயற்சிகள் முன்னெடுக்க முடியாத நிலைமை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம மட்டத்திலும் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் மேற்படி கிராமங்களில் காணப்படும் பதுங்கு குழிகளை மூடி உக்காதப் பொருட்களை அகற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு மாவட்டச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேற்படி கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.