யாழில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மூவரும் பொலிஸாரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மூன்று மாணவர்களும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்து இறங்கியபோதே, அங்கிருந்த நபரொருவரால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த தர்மஜோதி ராஜ்குமார் (வயது 14), ஹென்றிமோன் அபிசேன் (வயது 14), விசுப்டியோன் (வயது14) ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டவர்களாவர். கடந்த திங்கட்கிழமை விளையாடச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்று, விளையாட்டின் நிமித்தம், புகையிரதம் மற்றும் பஸ்ஸில் பயணிக்க வேண்டுமென்ற ஆசையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரை பஸ்ஸில் சென்றோம் என மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து மீண்டும் புகையிரதத்தில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு நேற்றுமாலை வந்த வேளையே மூவரையும் அறிந்திருந்த நபர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம் மூவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் மூவரும் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டநிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.