கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடைமழை காரணமாக ஆயித்தியமலை கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட கற்பானைக் கிராமத்தில் அமைந்துள்ள மூன்று சிறிய குளங்கள் உடைப்பெடுத்தன. இதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக அங்கு நேரில் சென்றிருந்தார்.
55 குடும்பங்கள் மழை வெள்ளத்தினால் பாதிப்படைந்து வெளியேறியுள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் பா.உ வியாழேந்திரன் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உட்பட மாவட்ட பிரதேச அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து நேற்று (31.01.2017) மீண்டும் கற்பானை கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் அவர்கள், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு, கிராமத்தில் உள்ள 55 குடும்பங்களுக்கு உலருணவு பொருட்களையும், கற்பானைக்குளம் மளலைகள் அறிவாலயம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வின்போது கற்பானைக்குளம் கிராமத்தில் எதிர்வரும் காலங்களில் செய்யப்பட வேண்டியுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் கிராம மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டிருந்தார்.