maithiriநாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் ஒன்று திரண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவோம் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான மாணவர் தலைமைத்துவ மாநாட்டில் உறுதிமொழியை வழங்கினர். இந்த மாநாட்டின் இறுதி நிகழ்வில், பிரதம விருந்தினராக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். தேசிய நல்லிணக்கம் தொடர்பான மாணவர் தலைமைத்துவ மாநாடு, அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தில் நடைபெற்றிருந்தது.அத்துடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் கல்விசார் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நாட்டின் வௌ;வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்று திரட்டி, அவர்களின் தலைமைத்துவ ஆளுமைகளை விருத்தி செய்து, இளைஞர்களை நல்லிணக்கத் தூதுவர்களாக உருவாக்குவது இதன் நோக்காக அமைந்துள்ளது.

இந்நிகழ்வில், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், மாணவர்கள் நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை அறிந்து கொண்ட போதிலும், வயது வந்தவர்கள் இவ்விடயங்கள் பற்றி பாராமுகமாக செயலாற்றுவது வருந்தத்தக்கது. அவர்கள் கொண்டுள்ள பொறாமை, கோபம், வெறுப்புணர்வு காரணமாக இந்நிலை நிலவுவதாக நான் கருதுகிறேன். சிறுவர்களுக்கு நல்லிணக்கத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள உதவுவதுடன், ஏனையவர்களுக்கும் இந்த செய்தியை வியாபிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாள் முழுவதும், மாணவர்கள் இந்த விடயம் தொடர்பான செயலமர்வுகளில் பங்கேற்று, வௌ;வேறு கலாசாரங்கள், ஒழுக்க விழுமியங்கள் குறித்து அறிந்து கொண்டதுடன், தமது சமூகத்துக்கு நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய அடிப்படைகள் பற்றியும் அறிந்து கொண்டனர்.

இதில் சமூக ஊடக வலைத்தளங்களை பயன்படுத்தி நல்லிணக்கத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதும் அடங்கியிருந்தது. குறிப்பாக தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் பாடசாலை மட்டத்தில் அவர்களால் முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் போன்றனவும் அடங்கியிருந்தன. நாடு முழுவதிலும் இது போன்ற செயற்பாடுகளை நீண்ட கால அடிப்படையில் முன்னெடுப்பதற்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் தீர்மானித்துள்ளது.