jaffna 04.02.17இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினம் தலைநகர் கொழும்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட அதேவேளை, வடக்கில் யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் இந்த சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு துக்க தினமென தெரிவித்து கறுப்பு கொடி கட்டி போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

வட மாகாண சபையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், க.சவர்வேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உள்ளுராட்சி மன்றங்களின் முக்கியஸ்தர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.jaffna .04.02.17முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி சில தினங்களாகப் போராட்டம் நடத்தி வருபவர்களால், பேரணி நடத்தப்பட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது.

தேசியக் கொடியேற்றி சுதந்திர தினத்தை அனுசரித்த நிகழ்வுகள் நடைபெற்ற யாழ்ப்பாணம் அரச செயலகத்திற்கு அருகில், ஏ9 வீதியோரத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுதந்திர தினத்தை துக்க தினமாகக் குறித்து காட்டும் வகையில் கறுப்புப் பட்டி அணிந்திருந்தனர்.

யாழ் அரச செயலக வளாகத்தில் நடைபெற்ற பிரதான சுதந்திர தின நிகழ்வுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் செயலகத்திற்குச் செல்லும் வீதிகளில் தடுப்புக்களை ஏற்படுத்தியிருந்தனர். பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏ9 வீதியை வழிமறித்து போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மீனவர்களை ஒன்று திரட்டி மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்ததையடுத்து, யாழ் மாவட்ட நீதவான் நீதிமன்றம் அத்தகைய ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதித்திருந்தது.

ஆயினும் அந்தத் தடையையும் மீறி ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார், ஒரு மணிநேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

காணாமல் போனோர் பிரச்சனைக்கு தீர்வு, ஆக்ரமிக்கப்பட்ட நிலங்களை திரும்பத் தருவது, புதிய காணிகளை ஆக்ரமிக்கும் நடவடிக்கைகளை கைவிடுதல், போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சுதந்திர தினத்தைத் துக்கத்தினமாக அனுசரித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, இந்த நீதிமன்ற உத்தரவை சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரிடம் காவல் துறை அதிகாரிகள் கையளித்தனர்.
ஆயினும் நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டுள்ள வகையில் தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என தெரிவித்து, தமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை, மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் காவல்துறையினருக்குத் தெளிவுபடுத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. எவரும் கைது செய்யப்படவுமில்லை.