vijalendran mpவடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக த.தே.கூ கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் (உபதலைவர்) அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மாஞ்சோலை கலாசார மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரதமரின் கருத்து வேடிக்கைக்குரியது,

தமிழர்களின் மத்தியில் பிரதமரின் கூற்றை ஒரு கேலிக் கூற்றாகவே பார்க்கின்றார்கள்.

வட, கிழக்கில் தங்களின் உறவுகளைத் தேடி நடாத்தும் போராட்டங்களை தென்னிலங்கையில் உள்ள அரசியல் சக்திகள் நாட்டை குழப்புகின்ற அல்லது அரசாங்கத்தை குழப்புகின்ற செயற்பாடு என சட்டம் போடுகின்றார்கள்.

தமிழ் மக்கள் அரசாங்கத்தை மாற்றவோ அல்லது ஜனாதிபதியாகுவதற்கோ போராட்டங்களை நடத்தவில்லை,

தங்களின் கையினால் இலங்கை பாதுகாப்பு படையினரிடம் கொடுத்த உறவுகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விரைவாக கண்டு பிடித்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே பல போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.

அதனையே தென்னிலங்கை அரசியல் சக்திகள் வேறு விதமாக சித்தரிக்கின்றார்கள்.

ஏறாவூர் போன்ற எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஏறாவூர் எல்லைப் பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களின் வீட்டுத் திட்டம் மற்றும் ஏனைய வசதிகளை மாவட்ட அரச அதிபர் மிக விரைவாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அது தொடர்பாக விரைவாக அரச அதிபர் பெற்றுக் கொடுப்பதாக உறுதி வழங்கியிருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.