sas (2)முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாக இன்றுவரை தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் இந்த போராட்டத்துக்கு இன்னும் பல இளைஞர்களை திரட்டி ஆதரவு வழங்கும் நோக்கிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் இன்றையதினம் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர். யாழ் பல்கலைகழக ஆசிரியர் சங்க தலைவர் பவன் மற்றும் மாணவர் ஒன்றிய தலைவர் அனுஜன் மற்றும் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட ஒன்றியத்தலைவர் ரஜீவன் தலைமையில் வருகைதந்த விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டதோடு, இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் விடுவிக்கபட வேண்டுமெனவும் கேப்பாபுலவு மக்களின் சொந்த நிலங்களை மீட்பதற்கான போராட்டம் நியாயமானது எனவும் தெரிவித்து மகஜர் ஒன்றினையும் மக்களிடம் வாசித்து காட்டினர்.

அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில் தமது உயிரை மாய்த்தேனும் இந்த போராட்டம் வெற்றிபெற உழைப்போம் என தெரிவித்துள்ளதை மறுத்த யாழ் பல்கலை கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் ரஜீவன் உயிரை மாய்ப்பதால் அரசாங்கமோ இராணுவமோ மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்போவதில்லை என்றும் இவ்வளவு காலமும் மண்ணுக்காக எத்தனையாயிரம் உயிர்கள் மடிந்தபோதும் பணியாத அரசும், இராணுவமும் இதற்கு பணியாது எனவும்

ஏற்கனவே கடந்த வருடம்கூட கைதிகளின் விடுதலைக்காக தனது உயிரை ரயில் முன் பாய்ந்து விட்ட செந்தூரன் எனும் மாணவனின் கோரிக்கைக்கு கூட இதுவரையில் செவி சாய்க்காத இராணுவம் இதற்கு அடிபணியாது எனவும் தெரிவித்ததோடு உங்களின் போராட்டத்துக்கு எமது பல்கலைக்கழகம் எந்நேரமும் ஆதரவாகவே இருக்கும் என்பதனையும் எதற்கும் அடிபணியாது உங்களின் போராட்டத்தை நடத்துங்கள் எனவும் தமது ஆதரவை தெரிவித்தார்.

இனி வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என்பதற்க்காக குரல் கொடுக்கும் விதமாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த மக்களின் போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனில் அனைத்து தரப்பினரும், அனைத்து மக்களும் இவர்களுக்கு ஆதரவினை வழங்கவேண்டும் என்றும், முக்கியமாக இளைஞர்களின் ஆதரவு அவசியமானது எனவும் தெரிவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.