கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள். எப்போதும் ஒரே குரலில் தான் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று நீங்கள் உலகிற்கு ஒரு செய்தியைச் சொல்லியுள்ளீர்கள் என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய உணர்விலும் போராட்டத்திலும் வேறு எந்த மாவட்டத்திற்கும் சலைத்தது அல்ல. கிழக்கு மாகாணத்திலே அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்துதான் அனைத்து இயக்கங்களுக்கும் மிகப் பெருந்தொகையான இளைஞர்கள் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்வதற்கு சேர்ந்தார்கள் என்ற உண்மையை நான் இங்கு கூறித்தான் ஆகவேண்டும்.அது மாத்திரமல்ல 1956ம் ஆண்டு ஜூன்மாதம் 05ம் திகதி சிங்கள மாத்திரம் என்ற சட்டம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, தந்தை செல்வா தலைமையிலே காலிமுகத் திடலிலே ஒரு சத்தியாக்கிரக போராட்டம் நடாத்தப்பட்டது. இதன்போது இனவாத குண்டர்கள் சத்தியாக்கிரகிகளை மிக கொடூரமாக அடித்து காயப்படுத்தி அவர்களைக் கலைத்து அந்த சத்தியாக்கிரகத்தை குழப்ப முயற்சித்தார்கள். இரத்தம் சொட்டச் சொட்ட அண்ணன் அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்றத்தில் பேசியபோது, அன்று பிரதமராக இருந்த பண்டாரநாயக்க அவர்கள், வீர வடுக்கலுடன் வந்திருக்கிறார் என்று கேலி பேசினார். அவரது கேலியைத் தொடர்ந்து தென்பகுதியில் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன.
அந்த கலவரங்கள் படிப்படியாக கிழக்கு மாகாணத்திற்கும் வந்தது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மகாவலி திட்டத்தின்கீழ் குடியேற்றப்பட்ட பெரும்பான்மையின சிங்கள மக்களில் பலர் தமிழ் கிராமங்களை தாக்குவதற்கென புறப்பட்டு எங்களுடைய துறைநீலாவணைக் கிராமத்தை தாக்குதவதற்காக அதனைச் சுற்றிவளைத்தார்கள். அங்கிருந்த இளைஞர்கள் அவர்களைச் சுற்றிவளைத்து அவர்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு பாவிப்பதற்கு வைத்திருந்த துவக்குகளைக் கொண்டு அவர்களைச் சுட்டார்கள். உடனே அவர்கள் தலைதெறிக்க ஓடிவிட்டார்கள். இதுதான் முதன் முதலாக தமிழர்களுடைய சரித்திரத்திலே ஒரு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த நிகழ்வாகும். பின்பு ஒரு இராணுவ ஜீப் வண்டியிலே இராணுவத்தினர் வந்தார்கள். அந்த இளைஞர்கள் ஜீப்பை நோக்கி சுட்டபோது அந்த ஜீப்பை விட்டுவிட்டு இராணுவத்தினர் ஓடிவிட்டார்கள். அந்த ஜீப் கொளுத்தப்பட்டது. அதன் பிறகுதான் பண்டாரநாயக்க அவர்கள் அவசரகால சட்டத்தையும் ஊரடங்கு சட்டத்தையும் போட்டு அந்த கலவரங்களை அடக்குவதற்கு உத்தேசித்தார்.
அது மாத்திரமல்ல 1957ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஷ்டிப்பதென தீர்மானிக்கப்பட்டு இளைஞர்கள் எல்லாம் கடைகளை பூட்டும்படி கடைகடையாக சென்று கேட்டிருந்தனர். திருமலை நகரிலுள்ள பெரும்பான்மையின சிங்கள மக்களின் ஆதிக்கத்தில் அன்றும் இருந்த இன்றும் இருக்கின்ற சந்தைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய மணிக்கூட்டுக் கோபுரத்தின்மேல் கறுத்தக் கொடியை நடராசா என்ற இளைஞர் கட்டியபோது மறைந்திருந்த ஒரு சிங்கள காடையர்; துவக்கினால் சுட்டதில் அங்கிருந்து விழுந்து அவர் மரணமானார். அது தான் விடுதலைப் போராட்டத்தின் முதலாவது களப்பலியாகும். ஆகவே, கிழக்கு மாகாணம்தான் ஆயுதப் போராட்டமாக இருந்தாலென்ன அறவழிப் போராட்டமாக இருந்தாலென்ன ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறது.
இன்றைய எழுக தமிழ் பேரணியைப் பொறுத்தமட்டில் யாழ்ப்பாணத்திலே எழுக தமிழ் வைக்கப்பட்டு இங்கு வாசிக்கப்பட்டதை ஒத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது அங்கும் மிகப் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டார்கள். அப்போது சொல்லப்பட்டது வடக்கிலே தான் இப்படியானதைச் செய்ய முடியும். கிழக்கிலே இருக்கக்கூடிய மக்கள் இதை ஏற்கமாட்டார்கள் என்று. ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள். எப்போதும் ஒரே குரலில் தான் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று இன்று நீங்கள் நிருபித்துள்ளீர்கள் என்று கூறினார்.