தமிழ் மக்களுக்கு சரியான தீர்வொன்றை இந்த அரசாங்கம் வழங்கும் வரையில் அறவழி போராட்டம் தொடரும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – நாவற்குடா மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு எழுக தமிழ் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில், ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எதிர்பார்த்தே இந்த நல்லாட்சி கொண்டுவரப்பட்டது. அதற்கு அப்பால் உடனடி தீர்வுகளை எதிர்பார்த்திருந்தனர். அதன் அடிப்படையில், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், தமிழர்களுடைய வடகிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல் ஆக்கோப்பட்டோருக்கான நீதிகள் வழங்கப்படவேண்டும், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறந்த வாழ்வாதரத் திட்டங்களை ஏற்படுத்தப்படவேண்டும்,
வடக்கு – கிழக்கில் ஒரு இலட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளை இந்த மண் தாங்கி நிற்கின்றது. அதேவேளை, மட்டக்களப்பில் 30 ஆயிரம் விதவைகளை தாங்கி நிற்கின்றது. இந்த இளம் விதவைகளுக்கான வாழ்வாதாரத் திட்டம் ஏற்படுத்தப்படவேண்டும் என இந்த அரசாங்கத்திடம் எமது மக்கள் எதிர்பார்த்து நின்றனர்.
ஆனால், இந்த நல்லாட்சி அரசாங்கம் கால நீட்டடிப்பை மட்டுமே செய்துவருகின்றதே தவிர, மக்கள் எதிர்பார்த்த அந்த உடனடி தீர்வுகளுக்கான எந்தமான பரிகாரங்களும் முழுமையாக செய்யவில்லை என்றார். வடக்கு – கிழக்கு இணைக்கின்ற கோட்பாட்டிலே நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். இந்த எழுச்சி பேரணியில் ஒன்று கேட்கின்றேன்,
தென்னிலங்கையில் நடக்கின்ற போராட்டம் தோல்வி அடைந்த மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான போராட்டம். வடக்கு – கிழக்கிலே நடக்கின்ற போராட்டம், தமது நீதியான நியாயமான உரிமைக்கான போராட்டம். எனவே, தென்னிலங்கையில் நடக்கின்ற போராட்டத்துடன் வடக்கு – கிழக்கிலே நடக்கின்ற போராட்டத்துடன் ஒப்பிடவேண்டாம் என அவர் மேலுமத் குறிப்பிட்டார்.