நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை என மட்டக்களப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்றுமுற்பகல் இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய வியாழேந்திரன் பா.உ., அவர்கள், ஜனவரி 31ஆம் திகதியிலிருந்து தெருவோரத்திலே குளிரிலும் வெயிலிலும் வேதனையுடன் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தை முல்லைத்தீவு மக்கள் நடாத்தி வருகின்றனர். கேப்பாப்பிலவு மக்கள் இறுதி யுத்தத்திலே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரை சென்று மிகப் பெரிய பாதிப்புக்களையும் இழப்புக்களையும் சந்தித்து இப்பொழுது பெருந்துயரோடு வீதியோரத்தில் வந்து தமது துன்பதுயரத்துக்கு முடிவு வேண்டி தவம் கிடக்கின்றார்கள். செட்டிக்குளம் முகாம் தொடக்கம் இன்றுவரை அவர்கள் வேதனைகளைச் சுமந்துகொண்டுதான் காலங் கழிக்கின்றார்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மீள்குடியேற்றம் என்ற பெயரிலே அவர்கள் குடியேற்றப்பட்டாலும் அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் அங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. நல்லாட்சியிலே தமது நிலபுலன்கள் மீளக் கிடைக்கும் என்கின்ற பாரிய எதிர்பார்ப்பு அவர்களுக்கிருந்தது. ஆனால், நல்லாட்சி கடந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்ட போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரைத் தீர்வில்லை.
ஜனாதிபதியவர்கள் வரை கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினை எத்தி வைக்;கப்பட்டிருந்தாலும் இதுவரை உரிய நடவடிக்கைகளை நல்லாட்சியின் ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் அரசாங்கமும் எடுக்காதது கவலையளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா முன்றலில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம்,காந்தி சங்க தலைவர் அ.செல்வேந்திரன், தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இராணுவமே வெளியேறு.! நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.