யுத்தம் முடிந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் வழங்கப்படாது தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்புக்களில் இருந்துவரும் நிலையில் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளை தமக்கே வழங்கக்கோரி இன்றுடன் 13ஆவது நாளாக தமது காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விமானப்படை முகாமிற்கு முன்னால் தொடர்ச்சியாக நில மீட்பிற்கான சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்தில் இன்று வட்டு இந்து வாலிபர் சங்க உறுப்பினர்களும் பங்கு பற்றியதுடன். தமிழ் புலம்பெயர் அமைப்பான லண்டனைச் சேர்ந்த எதிர்காலத்திற்கான பாதை என்ற அமைப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக கேப்பாபுலவு மக்களுடன் அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் 200 மதிய உணவு பொதிகளையும் சுமார் ரூபா 60,775 பெறுமதியான உலர் உணவுப்பொருட்களான அரிசி 200கிலோ பால்மா 30 பெட்டி சீனி 100கிலோ ரின்மீன் 25 தேயிலை 10கிலோ சோயா 10கிலோ பருப்பு 25கிலோ பிஸ்கட் 10 பெட்டி நுளம்புத்திரி 10பெட்டி கற்பூரம் 10 பெட்டி என்பவற்றையும் வழங்கியுள்ளது. அனைவரையும் நம்பியது போதும் எமது நிலத்தை தாமே மீட்க முடியும் என்ற மன நிலையில் தொடரச்சியாக போராடிவரும் கேப்பாபுலவு உறவுகளுக்கு பலதரப்பட்ட அமைப்புக்கள் மற்றும் பல வழிகளிலும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தாமாகவே முன்வந்து இவ் மக்களின் நிலையினை புரிந்து எமது தாயக உறவுகளுக்கு ஆதரவினை வழங்கிய எதிர்காலத்திற்கான பாதை அமைப்பிற்கு நன்றிகளை கூறிக்கொள்கிறோம். இவ் மக்கள் தமது நில மீட்பிற்கான சாத்வீக போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் தொடர்ச்சியாக உள்ளனர்.
எமது மக்களின் தாயக பூமிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருக்கும் படைத்தரப்புக்கள் வெளியேற இவ் சாத்வீக போராட்டம் முன்னுதராணமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இதுவரை காலமும் நாங்கள் சிந்திய இரத்தமும் இழந்த உறவுகளும் போதும் எமது மக்களின் நிலங்களை மீட்க உறவுகளே நீங்களாக முன்வந்து உங்களின் நிலங்களுக்கு முன்னால் சாத்வீக வழியில் இம் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான காலம் இது.
எமது நிலங்களை எங்களால் மட்டுமே மீட்க முடியும் மக்களாகிய நாங்கள் சிந்தித்து செயற்படுவதற்கு சரியான காலம் இதுவாக அமையட்டும்.. மக்களின் போராட்ட வடிவம் மாறலாம் போராட்டம் என்பது மாறாது. (வட்டு இந்து வாலிபர் சங்கம்)