யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் 2017 இல்ல விளையாட்டுப் போட்டி இன்று 15.02.2017 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் நா.மகேந்திரராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். விருந்தினர் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில்,
தங்களுடைய குழந்தைகளுக்கு யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு அனுமதி பெற்றுத் தரும்படி மார்கழி மற்றும் தை மாதங்களில் மிகப் பெருமளவிலான கிராமத்துப் பெற்றோர்கள் எங்களிடம் வந்து வினயமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதிபர் மகேந்திரராஜா அவர்கள் தனிப்பட்ட ரீதியில் உங்களுடன் நண்பர் என்கிற ரீதியில் நீங்கள் கூறினால் அவர் அனுமதி தருவார் என்றும் கூறுவார்கள். அப்போது அவர்களுக்கு நான் கூறுவது, உங்களுடைய அயற் பாடசாலையை சிறப்புறச் செய்யவேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் அயற் பாடசாலைகளில் உங்கள் பிள்ளைகளை அனுமதியுங்கள். அப்போதுதான் நாங்கள் கிராமப் பாடசாலைகளை முன்னேற்ற முடியும். குடாநாட்டில் மிகச் சிறந்தநிலையில் இருந்த எங்களுடைய கல்வி இன்று பின்னடைவுக்குச் சென்றிருக்கின்றது. ஆகவே. கிராமப் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவது எங்கள் எல்லோருடைய கடமை என்று அவர்களுக்குக் கூறுவேன்.
ஆனால் இந்த விளையாட்டுப் போட்டியில் நான் கலந்துகொண்டு பார்த்த பின்புதான் அந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்ப்பதற்கு உதவுமாறு இந்தளவுக்கு ஏன் வற்புறுத்திக் கேட்கின்றார்கள் என்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அவ்வளவு சிறப்பாக இந்த விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டிருக்கின்றது. அதேபோல, கல்வி உள்ளிட்ட மற்றைய அனைத்து விடயங்களிலும் இந்தக் கல்லூரி மிகச் சிறப்பாக இயங்குகின்றது என்பது எனக்குத் தெரியும்.
இருந்தாலும் முன்பு இருந்ததுபோல குடாநாட்டில் இருக்கக்கூடிய பாடசாலைகள் அனைத்தினதும் தரத்தை உயர்த்த வேண்டியது எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும். தனிப்பட்ட பெற்றோராக தங்களுடைய குழந்தைகள் வருங்காலத்தில் சிறப்பாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதை நாங்கள் தவறு என்று கூறமுடியாது. பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய குழந்தைகளின் சிறப்பான வாழ்வுதான் தங்களுடைய வாழ்க்கையின் இலட்சியமாக கொண்டவர்கள்.
இருந்தாலும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன் என்கின்ற ரீதியல் குடாநாட்டில் இருக்கக்கூடிய மற்றைய அனைத்துப் பாடசாலைககளின் தரத்தையும் உயர்த்த வேண்டியது எமது கடமையாகும். அதற்காக யாழ் இந்து கல்லூரியுடையதோ அல்லது நகரப் புறங்களில் இருக்கக்கூடிய பெரிய பாடசாலைகளினதோ தரத்தினை ஒரு அங்குலமேனும் குறைப்பதற்கு அனுமதிக்க முடியாது. ஆகவே தான் கடந்த காலங்களில் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நகரப் பாடசாலைகளுக்கும் குறிப்பிட்டளவு நிதியை அந்தப் பாடசாலைகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கியிருக்கின்றேன்.
ஆகவே, நாங்கள் அனைவருமாக கிராமப்புற பாடசாகைளின் தரத்தை உயர்த்துவதுடன், நகரப் பாடசாலைகளின் தரத்தினைப் பேணிப் பாதுகாப்பதும் எங்களுடைய கடமையாகும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டிய பிள்ளைகளுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது திருமதி மீனா சித்தார்த்தன் அவர்கள் பரிசில்களை வழங்கிவைத்தார். மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் என மிகப் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.