fdகாணி விடுவிக்கப்படும் என்ற தகவலை அடுத்து ஆவலோடு காத்திருக்கின்றோம். வெற்று வாக்குறுதிகளை மட்டும் நம்பி போராட்டத்தை கைவிடமாட்டோம். எமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென இன்றும் 16 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவரும் கடந்த 31.01.2017 தொடக்கம் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று எமது காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற செய்தி கிடைத்தது. அந்த செய்தியால் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது காணிகளில் எம்மை குடியமர்த்தும் நாளுக்காக காத்திருக்கின்றோம். ஆனால் கிடைத்த செய்தி வாக்குறுதியாக மட்டும் எமக்கு வழங்கப்பட்டு எமது போராடடத்தை முடிவுறுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமேயானால் எமது போராடடம் இன்னும் தீவிரமடையும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இந்த மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் இதுவரையில் இந்த மக்களின் காணிவிடுவிப்பு தொடர்பில் அரச அதிபரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பிலும் ஆராயும் பொருட்டும் அத்தோடு காணி விடுவிப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தி முன்னெடுப்பது தொடர்பிலும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், கந்தையா சிவநேசன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

அத்தோடு இன்றையதினம் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கடற்தொழிலுக்கு செல்லாது தொழில் நடவடிக்கைகளை புறக்கணித்து போராட்டக்களத்திற்கு வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளியிடடனர்.

இன்றைய தினம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை தெரிவித்தனர்.

அத்தோடு இன்றைய தினம் போராட்டக்களத்தை விசேட விமானம் ஒன்று அடிக்கடி வருகைதந்து தாழ்வாக பறந்து பலதடவை சுற்றிவந்து சென்றதால் மக்கள் அனைவரும் பரபரப்பாக காணப்பட்டதோடு விமானப்படையினர் தமது போராட்ட நடவடிக்கையை படம்பிடிப்பதாக தெரிவித்துள்ளனர்.